Breaking News

வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் 16 பேர் பலி, 103 பேர் காயம்

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் மரணமடைந்ததுடன், 103 பேர் காயமடைந்தனர் என வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே தெரிவித்துள்ளார். 


வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற வீதி பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த காலங்களில் ஏற்பட்ட கொரோனா பேரும் தொற்று காரணமாக  பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ் நடவடிக்கைகள் மூலமாக வவுனியா மாவட்டத்தில் வீதி விபத்துக்கள் மூலம் 16 பேர் மட்டுமே மரணித்துள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தும், 60 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இவ்வாறான விபத்துக்களின் மூலமாக சிறுவர்கள், இளைஞர்கள், மற்றும் முதியவர்களே பாதிக்கப்படுகின்றனர்.

இதுதவிர்ந்து கடந்த இரு மாதங்களில் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் 04 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலை தொடருமாயின் இவ்வருடத்தில் 20 தொடக்கம் 25 மரணங்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்காரணம் சட்டதிட்டங்களை மதிக்காத சாரதிகள் மற்றும் இரவு வேளைகளில் வெளிச்சங்கள் இல்லாத வாகனங்களில் பயணிப்பது, போன்ற காரணங்களினால் இவை  ஏற்படுகின்றது என்று தெரிவித்தார். (Vavuniyan) 

No comments