Breaking News

விடுதலை போராட்டங்கள் அழிய வெளிநாடுகளே காரணம்!! அரசுடன் பேசுங்கள்!! தமிழர் தரப்புக்கு ஈரோஸ் அழைப்பு!!



கொடூரமாக போரில்  அழிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், தமிழ் தரப்புக்கள் அரசாங்கத்துடன்  பேசுவதே சிறந்த விடயமாக இருக்கும் என்று ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்தார்.

ஈரோஸ் அமைப்பின் மக்கள் சந்திப்பு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்...

வன்னியை பொறுத்தமட்டில் பின்தங்கிய பல கிராமங்கள் இருக்கிறது. எமது மக்களுக்கு சரியான முறையில் அபிவிருத்தி திட்டங்கள் சென்றடையவில்லை என்பது பலரதுமுறைப்பாடாக இருக்கிறது. நாம் அது தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுப்போம். 

விவசாயிகளின் உரம் தொடர்பாக பல்வேறு பிரச்சனை இருந்தது. அந்த திட்டம் ஒரு சிறந்தவிடயம். ஆனால் அதை சரியான முறையில் அரச அதிகாரிகள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. கோரோனா காரணமாக இலங்கையில் மாத்திரமல்ல உலகளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு அதனை ஒருவித பிரச்சாரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

அத்துடன் உயிரிழந்த வடபகுதி மீனவர்களின் துயரத்தில் நாங்கள் பங்குகொள்கின்றோம். அந்த பிரச்சனைக்கு அரசு நல்ல தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சருடன் பேசியுள்ளோம். அதனை தீர்ப்பதாக  அவர் எமக்கு உறுதியளித்துள்ளார். எனினும் அந்த கொடுமையான சம்பவத்திற்கு எமது எதிர்ப்பை இந்திய அரசுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். மீனவர்கள் கொல்லப்படுவதும், மீன்கள் சூறையாடப்படுவதும் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு தீர்வுகள் எடுக்கப்படவேண்டும். 

13ஆம் திருத்தம் பற்றி சில தரப்புக்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதற்கு நாங்கள் எதிர்ப்புதெரிவிக்க வில்லை.எம்மை பொறுத்தவரைக்கும் உள்நாட்டில் எமது பிரச்சனையை பேசித்தீர்ப்பதுதான் சரியான வழியாக இருக்க முடியும். தமிழர்களிற்கு ஒரு தீர்வு கட்டாயம் கிடைக்கவேண்டும். அதற்காகவே பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டது. அந்த தீர்வை எமது நாட்டுக்குள்ளேதான் பேசித்தீர்க்க முடியும். அயல்நாடுகளிடம் சென்று எந்தவித பயனும் இல்லை. விடுதலைப்போராட்டங்கள் அழிக்கப்பட்டதற்கு அந்நியநாடுகளே முழுக்காரணம். 

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்படும் போது இந்த அந்நியநாடுகள் அதனை பார்த்துகொண்டிருந்தது. எனவே ஆட்சிக்கு வரக்கூடிய அரசுகளுடன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒரு ஆதரவினை தெரிவித்தோ அல்லது எதோ ஒரு வழியில் உறவுகளை ஏற்ப்படுத்தியோ தான் இவற்றை தீர்க்கவேண்டும். எனவே நடந்து முடிந்த கொடூரமான போரில் அழிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கவேண்டும் என்றால். அரசாங்கத்துடன் தமிழ் தரப்புக்கள் பேசுவதே சிறந்தவிடயமாக இருக்கும் என்றார்.(Vavuniyan) 

No comments