மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காதவர்களே 148 பேரும் - செல்வம் எம்பி தெரிவிப்பு
மக்கள் இன்று தமது வாழ்வியலை கொண்டு செல்லமுடியாமல் அன்றாடம் வீதியில் நின்று அரசாங்கத்தை வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தும் நிலையில் 148 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றமை மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டை வளமிக்க பூமியாக பாதுகாத்துக்கொள்ள மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவதுடன் ஊழல் மோசடி நிறைந்த ஆட்சியாளர்களை வீட்டுக்கு செல்லுமாறும் வலியுறுத்துகின்றனர்.
இந் நிலையில் பாரளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மக்கள் வாக்குகளை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதில் தமது உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் எப்பாடு பட்டாலும் அதைப்பற்றி சிந்திக்காது அரசாங்கத்தை பாதுகாத்தே தீருவோம் என 148 பாராளுமன்ற உறுப்பினர்கள் கங்கணம் கட்டி நிற்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
இந்த பாராளுமன்றத்தில் 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்களுக்கான பிரதிநிதிகள் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
No comments