Breaking News

மதுபான விடுதி கொலை: சரணடைந்த சந்தேக நபர்


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி வல்லையிலுள்ள மதுபான விடுதியில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொலையுடன் தொடர்புடைய நால்வரில் மூவர் ஏற்கனவே நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 24 நாள்களின் பின்னர் முதன்மை சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

கடந்த மே 2ஆம் திகதி இரவு விடுதியில் மதுபானம் அருந்திய இரண்டு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் போத்தலினால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவத்தில் திக்கம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது- 25) என்பவரே கொலை செய்யப்பட்டார்.

சம்பவத்தையடுத்து போத்தலினால் குத்தியவர் உள்ளிட்ட நால்வர் தலைமறைவாகிய நிலையில் நெல்லியடிப் பொலிஸார் தேடி வந்தனர்.

அவர்களில் அல்வாய் கிழக்கைச் சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் வீட்டில் வைத்து இரண்டு தினங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

குடத்தனை மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். மற்றையவரும் சில தினங்களின் பின்னர் சரணடைந்தார்.

சந்தேக நபர்கள் மூவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதன்மை சந்தேக நபர் 24 நாள்களின் பின்னர் தனது சட்டத்தரணி ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். (Vavuniyan) 

No comments