போராளிகளை விசாரிக்காமல்! மாபியாக்களை கண்டுபிடியுங்கள்!! புலனாய்வு பிரிவினர்க்கு செல்வம் எம்பி அறிவுரை!!
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.....
ஏசி ரூமில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சாதாரணமக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.
அதிலும் பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வை கழிக்கும் அவல நிலை பலருக்கு ஏற்ப்பட்டுள்ளது. எனவே அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது அமைச்சர் பந்துல இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க்கமுடியாத கருத்தாகவே உள்ளது. எனவே இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
அத்துடன் அனைத்து மக்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கான வசதியினை அரசாங்கம் ஏற்ப்படுத்திக்கொடுக்க வேண்டும். எமது மக்களை எள்ளி நகையாடுபவர்கள், துன்பப்படுத்துபவர்கள், இந்த அரசாங்கத்திலே இருக்கக்கூடாது.
இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஜனாதிபதி எடுத்துள்ள முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டது போல எமக்கு தெரியவில்லை. எனவே புதியவர்கள் வந்த பின்னரும் சரியான திட்டமிடல் இல்லை என்றால் எமது மக்களே எல்லாவிதத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இன்று அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எரிபொருளை கோரி ரஸ்யாவிற்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்க வேண்டும்.
மக்களை நாட்கணக்கில் வீதிகளிலே காத்திருக்கச்செய்துவிட்டு தற்போது செல்கின்றமையானது அவர்களிடம் சரியான திட்டமிடல் இன்மையையே புலப்படுத்துகின்றது. இவர்களால் ஏன் சரியான ஒரு வழிமுறையை காண முடியாமல் போனது என்ற கேள்வி எழுகின்றது.
இதேவேளை களவு செய்பவர்களிற்கும், பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்கப்பெறுகின்றது. புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுபிரிவினர் ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். இவற்றை எல்லாம் இடைநிறுத்திவிட்டு எரிபொருளை பதுக்குபவர்களை கண்டறிவதற்காக இந்த புலனாய்வு உத்தியோகத்தர்களை பயன்படுத்து முடியும் என்றார்.
Post Comment
No comments