சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை - வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இணைந்து இன்று (17.06) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபோக நெற்செய்கை அறுவடை யூலை மாதம் முதல் கிழமையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இதனால் வவுனியா மாவட்டத்திற்கு கிடைக்கும் எரிபொருளை விவசாயிகளின் நன்மை கருதி சரியான முறையில் பங்கீடு செய்வது தொடர்பில் அரச அதிபர் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தின் மற்றும் பல்வேறு அரச திணைக்களத்தினரும் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு அறுவடை காலத்தில் தேவையான எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கும், வவுனியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்ற திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகர்தர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதனடிப்படையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளோம். விவசாயிகளுக்கு அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கியுள்ளோம். அந்தவகையில், செட்டிகுளம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம், நெடுங்கேணி எரிபொருள் நிலையம் என்பன இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
எமது மாவட்டத்தில் சிறுபோகத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நெல் செய்கை பண்ணப்பட்டுள்ளது. வருகின்ற யூலை முதல் கிழமையில் இருந்து ஓகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும் என எதிர்பார்கின்றோம். இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கு மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. இது சம்மந்தமாக அரசாங்க அதிபரால் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான எரிபொருளை பெற நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளோம்.
அதேபோன்று, அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் கிடைக்கும் காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியான ஒரு இயந்திரத்தில் தனியான ஒரு வரிசையை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமக்கு தேவையான எரிபொருளை விட கிடைக்கின்ற அளவு குறைவாக காணப்படுவதனால் மாவட்ட செயலகம், பொலிஸ், இராணுவம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுத்துள்ளோம். தற்போதைய நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வேண்டும் என்ற நிலையை கருத்தில் கொண்டு குறிப்பாக கட்டிட நிர்மாணங்களின் அளவு குறைவடைந்துள்ளமையால் கனரக வாகனத்திற்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உரிய திணைக்கள அனுமதியுடன் வருபவர்களுக்கு பரிசீலிக்கப்படும்.
தனியார் பேரூந்துகள், ஏற்றுமதி சார்ந்த கைத்தொழிற்சாலைகளின் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கும் என தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்கீடு செய்துள்ளோம். தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வேண்டுதலுக்கு அமைய ரட்னா எரிபொருள் நிலையம், ஏஎம்ரி எரிபொருள் நிரப்பு நிலையம் என்பன இதற்காக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு இ.போ.சபை மூலம் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளோம். கைத்தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களின் தேவைக்கான எரிபொருளை உரிய அனுமதியுடன் புலேந்திரன் மற்றும் சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் என்பவற்றில் பெறுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, எரிபொருள் கிடைப்பனவுக்கு ஏறப இதில் சில மாற்றங்கள் செய்யக் கூடியதாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
No comments