Breaking News

நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியிருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை - பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியிருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியா கோவில்குளத்தில் இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33வது வீரமக்கள் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய மக்களை பொறுத்த மட்டில் இந்த பொருளாதார கஸ்டம் என்பது புது விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயம். எங்களுடைய மக்கள் நீpண்ட காலமாக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இன்று நாடானது பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த கட்டமாக என்ன நடக்குமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
கோத்தபாஜ ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியமை மற்றும் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியமை என்பவற்றை போராட்டங்கள் மூலமாக இந்த போராட்டகாரர்கள் செய்து காட்டியுள்ளார்கள். சுதந்திரம் அடைந்தது தொடக்கம் இந்த நாட்டை ஆண்டு வந்த அரசாங்கங்கள் எல்லாமே பொருளாதார வளர்ச்சியிலோ அல்லது அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதிலோ அக்கறை கொள்ளாது சிறுபான்மை இனங்களையும் தேசிய இனங்களையும் அடக்குவதிலேயே தங்களது முழுமையான கவனத்தை செலுத்தி வந்தார்கள்.

அதேபோன்று பல குடியேற்ற திட்டங்கள் மற்றும் பாராம்பரிய இந்து ஆலயங்களிலே பௌத்த சின்னங்கள் இருப்பதாக கூறி பௌத்த மயமாக்கப்பட்டமை என்பவற்றிலேயே தங்களது நேரத்தையும் நிதியையும் செலவிட்டுவருகின்றது. அதே போன்று இந்த நாட்டிலே ஏற்பட்ட நீண்ட கால யுத்தமானது நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக அழிக்கின்ற விடயமாகவே இருந்துள்ளது.
மேலும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு துளியேனும் சிந்திக்காது தொடர்ந்தும் ஆக்கிரமிப்பிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இன்று கூட யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியிருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை. இந்த நாட்டின் மீது தமிழ் பிரதிநிதிகள் காட்டுகின்ற அக்கறை கூட தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் இல்லை.

தமிழ் அரசியல்வாதிகளான நாங்கள் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்று எப்பொழுதும் கூறி வருகின்றோம்.   ஆனால் அவர்கள் ஜனாதிபதி பதவிக்கும் பிரதமர் பதவிக்காகவுமே போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு என்ன செய்ய இருக்கின்றது என பலரும் கேள்வியெழுப்புகின்றனர். போட்டியாளர்கள் யார் என்பதை பார்த்த பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு தீர்மானத்திற்கு வரும். அது என்ன தீர்மானம் என்பதை தற்போது சொல்ல முடியாது. தமிழ் மக்களிற்கு சாதகமான முடிவு ஒன்றினையே நாங்கள் எமது தீர்மானமாக எடுப்போம்.

மேலும் சிறையிலே இருக்க கூடிய அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற விடயங்களை அவர்களிடம் முன்வைப்போம். இவற்றை எல்லாம் யார் எந்த வேட்பாளர் எங்களுக்கு சாதகமாக செயற்படுவார் என்பதை ஆராய்ந்து பார்த்த பின்புதான் எமது ஆதரவை வழங்க முடியும். இதற்காக ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்த பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி சரியான முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.



No comments