Breaking News

ஜனாதிபதி தேர்தலில் அதிக செலவு செய்தவர் யார் தெரியுமா!


ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்த பிரசார செலவறிக்கை வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கை நேற்றையதினம் (25) தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்காக, வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவை செலவிட வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இதற்கமைய தேர்தல் முடிந்து ஒரு மாதத்திற்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்ததது. 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 பேர் உரிய செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் தமது செலவின அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த அறிக்கை தொடர்பான தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிக செலவினத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க

அதன்படி 10 கோடியே 71 இலட்சத்து 12,903 ரூபாய் 53 சதத்தை அவர் டிஜிட்டல் ஊடக விளம்பரப்படுத்தலுக்காக பயன்படுத்தியுள்ளதுடன் மொத்தமாக 99 கோடியே 3 இலட்சத்து 27,687 ரூபாய் 16 சதத்தை செலவிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச  83 கோடியே 62 இலட்சத்து 58,524 ரூபாவை செலவு செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரசாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், சமூக மற்றும் டிஜிட்டல் விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 11 கோடியே 44 இலட்சத்து 98,830 ரூபாய் 65 சதத்தை அவர் செலவிட்டுள்ளார்.


அநுர குமார திஸாநாயக்க 

தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் ஜேவிபி கட்சியின் வங்கி கணக்குகளில் பெறப்பட்ட நன்கொடைகள் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளார்களால் வழங்கப்பட்ட 52 கோடியே 79 இலட்சத்து 99,089 ரூபாய் 38 சதத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்காக அநுர குமார திஸாநாயக்க செலவிட்டுள்ளார். அதில், பத்திரிகை விளம்பர தயாரிப்பு, பிரசாரம், சஞ்சிகைகள் மற்றும் சமூக ஊடக விளம்பரப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக 3 கோடியே 60 இலட்சத்து 2,885 ரூபாய் 18 சதம் அடங்கும்.


நாமல் ராஜபக்ச

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச எழுது பொருட்களுக்காக மாத்திரம் 20,000 ரூபாவை பயன்படுத்தியுள்ளதாக அவரது செலவறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலத்திரனியல், அச்சு ஊடக மற்றும் சமூக ஊடக பிரசார நடவடிக்கைகளுக்காக இரண்டு கோடியே 31 இலட்சத்து 44,987 ரூபாவை செலவிட்டுள்ளதுடன், 38 கோடியே 89 இலட்சத்து 39,000 ரூபாவை தேர்தலுக்காக செலவிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொத்த வருமானம் 18.8 கோடி என்பதுடன், 19.9 கோடி ரூபாய் செலவினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்தல்கள் ஆணைக்குழு


இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் பொது வேட்பாளரான பா. அரியநேத்திரன், பத்தரமுல்ல சீலரத்ன தேரர், சரத் கீர்த்திரத்ன மற்றும் ஏனைய 10 கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது செலவறிக்கைகளை இதுவரையில் சமர்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு பதில் காவல்துறைமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார கணக்கறிக்கையினை சமர்ப்பித்துள்ளதாக தமிழ்ப் பொதுக்கட்மைப்பின் வேட்பாளார் பா.அரியநேத்திரன் முன்னதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும், அவரது கணக்கறிக்கை கிடைக்கப்பெறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments