சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட இருவருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச் சாட்டில் வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் 4 வருட சிறைத்தண்டை வழங்கி தீர்பளித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றவாளியான சுவிஸ்குமாரை தப்பிக்க உதவிய வழக்கு இன்று (20.01) வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சுவிஸ்குமார் அவர்களை பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட நிலையில் அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான ஸ்ரீகஜன் ஆகியோருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டது.
சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜன் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
Post Comment
No comments