சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பம்பை நதியில் நீராட தடை
திருவனந்தபுரம் – மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு சபரிமலைக்கு பயணிக்கும் பக்தர்கள், பம்பை நதியில் நீராட அனுமதி வழங்கப்படாது என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் ஆலயத்தில், இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பருவக் காலம் ஆரம்பமாகின்றது.
இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டம் தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
மண்டல, மகர விளக்கு பூஜைகளின்போது தினந்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்கள் எனவும் இதற்கான இணைய வழி முன்பதிவு நடக்கிறது எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டும் சபரிமலைக்கு பெரிய பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் நீராடவோ, ஆலய சன்னிதானத்தில் தங்கவோ அனுமதி இல்லை என அவர் கூறினார்.
No comments