வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த வவுனியா பொலிசார் விசேட நடவடிக்கை
மின்சார தடை நேரத்தில் வீதிகளில் அதிகரித்து வரும் விபத்துக்களைக் கட்டுப்படுத்த வவுனியா பொலிசார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதனடிப்படையில், வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெளிச்சமின்றி (லைட்) துவிச்சக்கரவண்டிகளை செலுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
இரவு நேரங்களில் அதிகளவிலான விபத்துக்கள் வெளிச்சமின்றி பயணிக்கும் துவிச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டு வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த வவுனியாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் துவிச்சக்கரவண்டிகளில் செல்வோர் டைனமோ பொருத்தி லைட்களை பொருத்தியிருக்கவேண்டும் எனவும் மீறி செயற்படுபவர்களுக்கு, எதிராக சட்டநடவடிக்கை முன்னெடுக்கபடவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு 7.30 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் வவுனியா வைரவப்புளியங்குளம், வவுனியா நகரம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் விசேட பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வெளிச்சமின்றி (லைட்) துவிச்சக்கரவண்டிகளை செலுத்தியவர்களை வழிமறித்து அவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற விபரங்களை பொலிசார் சேகரித்ததுடன், இரு தினங்களில் துவிச்சக்கரவண்டிக்கு டைனமோ லைட்களை பொருத்தி வவுனியா பொலிஸ் நிலையத்தில் காண்பிக்க வேண்டும் எனவும், இதனை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தபடுவீர்கள் எனவும் அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதன்போது வெளிச்சமின்றி துவிச்சக்கரவண்டியில் பயணித்த 100 க்கு மேற்பட்டவர்களின் விபரங்கள் பொலிஸாரினால் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments