வவுனியாவில் மின் இணைப்பு தொடர்பான 100 முறைப்பாடுகளுக்கு தீர்வு
வவுனியாவில் மின் இணைப்பு தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்ற 100 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பணிப்பாளர் யசந்த ரதுவிதான தெரிவித்துள்ளார்.
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சேவையுடன் இணைந்து வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடமாடும் சேவையை மூன்று தினங்களுக்கு முன்னெடுத்திருந்தது. இது தொடர்பில் இன்று (17.03) கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் புதிய மின் இணைப்பு பெறுதல், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்தல், மின்மானி மாற்றுதல், மின் இணைப்பை இடமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக முறைப்பாடுகள் பெறப்பட்டிருந்தன.
இவை தொடர்பில் வவுனியா மாவட்டத்தில் இருந்து இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு 100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அதற்கு தீர்வு காணும் முகமாக மின்சார சபையுடன் இணைந்து நடமாடும் சேவை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது காணி ஆவணம் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக மின் இணைப்பு தொடர்பில் பிரச்சனைகளை எதிர்கொண்ட மக்களுக்கு மின்சார சபையின் ஊடாக தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த நடமாடும் சேவையில் பலரும் கலந்து கொண்டு மின்சார சபையிடம் இருந்து தமக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை பொதுச் சேவை ஆணைக்குழுவின் நுகர்வோர் விவகார பணிப்பாளர் யசந்த ரதுவிதான, பொதுச் சேவை ஆணைக்குழு உத்தியோகத்தர் ரஹான், வவுனியா மாவட்ட பிரதம மின் பொறியிலாளர் மைத்திலி தயாபரன், மற்றும் மின்சார சபை அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (Vavuniyan)
No comments