அரசியல் கைதிகளையும் மனிதர்களாக எண்ணி குடும்ப உறவுகளோடு வாழவைப்பது அரசின் கடமை. அருட்தந்தை மா.சத்திவேல்
அரசியல் கைதிகளையும் மனிதர்களாக கருதி அவர்கள் குடும்பங்களோடு சேர்ந்து குடும்ப உறவுகளோடு வாழவைத்து நாட்டுக்கு பயனுள்ளவர்களாக மாற்றுவது அரசின் கடமையாகும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (17) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடை சட்டத்தின் வரலாற்று கொடுமையின் இன்னுமொரு அடையாளமே விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் இளமையை எட்டிப்பார்க்காத 16 வயதில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 1996 கைது செய்யப்பட்டவர் கடந்த 26 வருடங்களாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முடிவின்றி உள்ளதோடு வாழ்நாளில் இழக்க வேண்டிய எல்லாவற்றையும் இழந்தவர் தற்போது தாயையும் இழந்துள்ளார்.
இவருக்கும் இவரது குடும்ப உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். 42 வயதை அடைந்துள்ளவர் இனி வாழ்வில் தொலைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பது மட்டுமல்ல இன்னும் எத்தனை தசாப்தங்கள் சிறைக்குள்ளே நடமாடும் சடலமாக வாழ்வை கழிக்க நேரிடுமோ தெரியாது. இவர் மட்டுமல்ல அரசியல் கைதிகள் அத்தனை பேருமே இந்நிலையில் தான் உள்ளனர். இத்தகைய வன் கொடுமை சட்டத்திற்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டால் மட்டுமே அரசியல் கைதிகளுக்கு எதிர்காலமும் வாழ்வும் உண்டு.
பொதுவாக ஏனைய சிறைக்கைதிகள் நன்னடத்தையின் அடிப்படையில் சிறை வாழ்வின் போது வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். நாட்டின் சமய மற்றும் முக்கிய நாட்களில் விடுதலை செய்யப்படுவர். கடந்த பொஷன் போயா தினத்தன்றும் 173 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அத்தோடு பிணையில் செல்லவும் அனுமதிக்கப்படுவர். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு இத்தகைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
குடும்ப உறவுகளின் அன்பிற்கும் பாசத்திற்கும் தூரமாக வைக்கப்பட்டிருக்கின்றமை மிகப் பெரும் கொலைபாடு தான். இதனால் தாய், தந்தை ,சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் என உறவுகளை நிரந்தரமாக இழந்துள்ள, பிரிந்துள்ள அரசியல் கைதிகளும் உண்டு. உறவுகளும் உண்டு. இதனை ஒரு சமூக கொடுமை என்றே கூறல் வேண்டும். இன விடுதலைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்களுக்கே இத்தகைய கொடுமை திணிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது மகனின் பாசத்தில் ஏங்கித் தவித்தவயது முதிர்ந்த தாய் வாகீஸ்வரியும், தாயின் பாசத்திற்கு துடித்த பார்த்தீபனும் உள்ளடங்குவர்.
அண்மையில் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்கள் மனித உரிமை ஆணையத்துக்கு" பயங்கரவாத தடைச் சட்டத்தில் போதுமான திருத்தங்கள் செய்துள்ளோம். 22 அரசியல் கைதிகளை விடுதலை செய்திருந்தோம்" என அறிக்கை கொடுத்தவர் இருபத்தி ஆறு வருடங்கள் சிறையில் வாடும் பார்த்தீபனுக்கு என்ன கூற உள்ளார் ?அவர் விடுதலை செய்ததாக கூறும் 22 பேரும் எப்போது கைதுசெய்யப்பட்டனர்? என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டனர்? அவர்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த காலம் எவ்வளவு? எனும் விபரங்களை வெளியிடுவாரா? இவர் விடுதலை என்பதும் சட்டத்திருத்தம் என்பதும் சர்வதேச ஏமாற்றும் அரசியல் நாடகமே.
அத்தோடு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பலர் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இன்றி பத்து வருடங்கள் கடந்த நிலையில் குற்றமற்றவர்களாக நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் தொடர்பில் இவரும், இவர் சார்ந்த அரசும் சர்வதேசத்துக்கு விளக்கமளிப்பார்களா?
அரசியல் கைதிகளுக்கு அரசியல் ரீதியான நீதி நிலைநாட்டப்படல் வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இவர்கள் அரசியல் கைதிகளாக அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்மானத்தின் மூலம் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். இவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடமளிக்கப்படல் வேண்டும்.
தற்போது நாடு முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உணவு கட்டுப்பாட்டையும் எதிர்நோக்கி இருக்கையில் அரசியல் கைதிகளையும் மனிதர்களாக கருதி அவர்களை குடும்பங்களோடு சேர்ந்து குடும்ப உறவுகளோடு வாழவைத்து நாட்டுக்கு பயனுள்ளவர்களாக மாற்றுவது அரசின் கடமையாகும். ஆதலால் குடும்பங்களோடு சேர்ந்து வாழ்வதற்கான ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய வேண்டும்.
No comments