தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் உபாலியின் பதவியை வலுவற்றதாக்க கோரி மனுத் தாக்கல்
அபிநவ நிவஹல் பெரமுன கட்சியின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளார். மனுவின் பிரதிவாதிகளாக அமைச்சர் உபாலி பன்னிலகே, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, ருஹுணு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பதவியில் இருந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமனம் செய்யப்பட்டமை அரசியலமைப்பின் 91ஆவது சரத்தின் பிரகாரம் சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கும், அங்கு வாக்களிப்பதற்கும் தகுதியற்றவர் எனவும், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை வலுவற்றதாக்கி உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
No comments